கோவையில் 200 கிலோ குட்கா பறிமுதல் – கடைகளுக்கு சப்ளை செய்த நபர் கைது
14/03/2026 கோவை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த நபரை போலீசார் கைது செய்து, 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை சார்ந்த போதைப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை Food Safety and Standards Act, 2006 மற்றும் COTPA Act, 2003 ஆகிய சட்டங்களின் கீழ் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர காவல் வடக்கு துணை ஆணையாளர் உத்தரவின்படி மற்றும் சாய்பாபா காலனி சரக காவல் உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின்படி கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையில் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமை காவலர் சக்திவேல் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோர் இணைந்து கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் புகையிலைப் பொருட்கள் தொடர்பாக தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆய்வாளர் வெற்றிச்செல்விக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்த அஸ்வின் குமார் (34) என்பவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விநியோகம் செய்து வருவதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அஸ்வின்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தடாகம் அருகே உள்ள சோமையனூரில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 200 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த இடத்தில் சோதனை நடத்தி, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அஸ்வின்குமார் மீது சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் போலீசாரின் நடவடிக்கையாகும். தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை சேமித்து விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...

No comments:
Post a Comment