இலவச வீட்டு மனை பட்டா கோரி மேட்டுப்பாளையத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில், மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் அருந்ததிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் இன்று (24.02.2026) மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தொடர்ந்து மனுக்கள் வழங்கியும் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
சமயபுரம், தாசம்பாளையம், மண்டேலா நகர், MSR புரம், சங்கர் நகர், சாந்தி நகர், மங்களக்கரை, காந்திபுரம், ஓடந்துறை, சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “பல ஆண்டுகளாக குடிசை பகுதிகளில் வசித்து வரும் எங்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படாமல் இருப்பது அநியாயம். இதனால் அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து பேசிய வட்டாட்சியர் கவிதா அவர்கள், பட்டா தொடர்பான பிரச்சனைகளை விரைவில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அவரது உறுதிமொழியை தொடர்ந்து, பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இருப்பினும், வாக்குறுதி நடைமுறையில் நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
கோவை செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment