கிணத்துக்கடவு, ஜன. 04:
கடந்த 03.01.2026 (சனிக்கிழமை) அன்று கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரத்திற்குட்பட்ட சிறுக்களந்தை ஊராட்சி ஜக்கார் பாளையம் கிராமத்தில், மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முகாம் L&T கோயம்புத்தூர் சுகாதார மையம், PRAYAS TRUST மற்றும் வெஸ்ட்ரிக் டிரஸ்ட் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியால் சிறப்பாக நடத்தப்பட்டது.
மேலும், கோவை வெஸ்ட்ரிக் டிரஸ்ட், PRAYAS TRUST மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து, ஜக்கார் பாளையம் கிராமத்தில் மதுரை வீரன் கோவில் அருகே இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் ஜக்கார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள், ஐயப்ப சுவாமி பக்தர்கள், விடியில் தேடி இளைஞர் மக்கள்நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த முகாமில் கண்புரை, கண் அழுத்த நோய் (Glaucoma), கண் சதை வளர்ச்சி உள்ளிட்ட கண் நோய்கள் கண்டறியப்பட்டன. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் கண் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்பட்டு, அவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமை கோவை வெஸ்ட்ரிக் டிரஸ்டின் நிறுவனர் G. ஜெகன் ஏற்பாடு செய்திருந்தார். முகாமின் ஒருங்கிணைப்புப் பணிகளை வெஸ்ட்ரிக் டிரஸ்ட் பணியாளர்கள் வி. மைலேஸ், ஆர். கார்த்திக், கோமங்கலம் கார்த்திக் மற்றும் தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். கற்பகம் ஆர்டிக்கல்ஸ் கே. மகேந்திரன் அவர்களும் நிகழ்விற்கு ஆதரவு வழங்கினார்.
மேலும், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் தெற்கு தோட்டம் பி. குணசேகரன், கல்யாண சாமி உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, இந்த இலவச கண் பரிசோதனை முகாமை மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பயன்படுத்திக் கொண்டனர்.

No comments:
Post a Comment