கோவை மாவட்டம் கள்ளு மையமாக மாறுமா?
பெள்ளாதி அண்ணாநகர் பகுதியில் சட்டவிரோத கள்ளு விற்பனை: பொதுமக்கள் நடவடிக்கை கோரிக்கை
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளாதி ஊராட்சி அருகே அண்ணாநகர் பகுதி தென்னந்தோப்பில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத கள்ளு வியாபாரம் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தகவல் சேகரிப்பில், வட பொன் முடி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரே இவ்வியாபாரத்தின் பிரதான நபராக இருப்பது உறுதியானது.
அவரிடம் இதுகுறித்து கேட்டபோது,
> “நாங்கள் தென்னந்தோப்பில் கள் இறக்கும் உரிமையை எங்களது சங்கத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறோம். எனவே யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை,”
என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் வருவாய் சட்டம், 1937 (Tamil Nadu Prohibition Act, 1937)-ன் படி, கள்ளு தயாரிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவை அனைத்தும் கடுமையாக தடைசெய்யப்பட்டவை. இதனை மீறுபவர்கள் மீது பிரிவு 4(1)(a), 4(1)(b) ஆகிய சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய தடை இருந்தும், தென்னந்தோப்பில் ஒரு லிட்டர் கள்ளு ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினசரி 100 முதல் 300 லிட்டர் வரை விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அந்தப்பகுதியில் சமூக அமைதி குலைவது, பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுவது எனப் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாநகர் மற்றும் தென்னந்தோப்பு பகுதி பொதுமக்கள் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), மற்றும் மதுவிலக்கு மற்றும் காவல் துறை பிரிவு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு, அந்த சட்டவிரோத வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பாதிவாளர் கார்த்திக் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment