பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்! கண்சிமிட்டிய அமைச்சர்! களமிறங்கிய நகரச் செயலாளர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்ட இரண்டு அதிமுக நிர்வாகிகளும் கட்சித் தலைமை மீதும் எஸ்.பி.வேலுமணி மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வந்திருக்கின்றனர். இதனையறிந்த பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் இருவரையும் திமுகவுக்கு தட்டித்தூக்கிவிட்டார்.
பொள்ளாச்சி நகர 17வது வார்டு அதிமுக செயலாளராகவும், அம்மா பேரவை நகர இணைச் செயலாளராகவும் இருந்தவர் தேவசேனாதிபதி. இவரது தந்தை எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவில் இருந்தவர் என்பதோடு தேவசேனாதிபதியும் எம்.ஜி.ஆரோடு குழந்தையாக இருந்த போதே புகைப்படம் எடுத்துக் கொண்டவர்.
இப்படி பாரம்பரியமாக அதிமுக குடும்பத்தை சேர்ந்த ஒருவரை திமுகவில் இணைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும் அவரை பொள்ளாச்சி திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் மிகவும் சாதுர்யமாக திமுகவில் இணைய வைத்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார்.
இதேபோல் அதிமுகவில் பொள்ளாச்சி நகர அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை தலைவராக இருந்த பஞ்சலிங்கமும் தேவசேனாதிபதியோடு இணைந்து திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். கடந்த வாரம் இதே போல் அதிமுக பொள்ளாச்சி நகர துணைச் செயலாளர் மாரியம்மாள் என்பவர் திமுகவில் இணைந்தார்.
போகிற போக்கை பார்த்தால் இன்னும் பல அதிமுக நிர்வாகிகள் திமுகவில் அடைக்கலமாகலாம் எனத் தெரிகிறது. இதனிடையே அதிருப்தி அதிமுக பிரமுகர்களை சமாதானம் செய்யும் பணியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ.சதிஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment