கோயம்புத்துார் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, காவல்துறையுடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணிக்கவும் பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தும் உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஜமாத் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேற்படி அமைப்புகளிடம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பேணிக் காக்க ஒத்துழைப்பு அளிக்க கோரப்பட்டது. மாவட்டத்தில் 23 அன்று முதல் நான்கு அதிவிரைவுப்படை ( RAF ) கம்பெனிகள் மற்றும் சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வருவாய்த் துறையினைச் சேர்ந்த அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . நகர்ப்புற பகுதிகளில் காவலர்களுடன் வார்டு வாரியாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கிராம வாரியாக கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பொருட்டும், உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்துார் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள் தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை எனவும், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் வன்முறையைத் துாண்டும் வகையில் மேற்படி நிகழ்வுகள் குறித்தும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் வண்ணம் இருந்தாலோ, சந்தேகிக்கப்பட கூடிய நடவடிக்கைகளில் ஏதேனும் நபர்கள் ஈடுபட்டாலோ உடனடியாக மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு (100/0422-2300970, Whatsapp 8190000100/0422-2300600 , Whatsapp 9498101165 ) தகவல் தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment